காலையில் நேர்முகத்தேர்வுக்கு வந்திருந்தார் ஒரு இளம்பொறியாளர். (Fresher). என்ன செய்கிறார் என்று விசாரித்தேன். கடந்த ஆண்டு BE படிப்பை முடித்துவிட்டு ஒரு ஆண்டாக வேலை தேடுகிறார்.
என்ன தெரியும் என்று கேட்டேன்.. C, C++ என்று கல்லூரியில் படித்த சப்ஜெக்டுகளை சொன்னார். அதில் ஆழமான / இண்டஸ்ட்ரிக்கு தேவைப்படும் விஷயங்கள் அவருக்கு தெரியவில்லை அல்லது கற்பிக்கப்படவில்லை...
ஆக அவரை நேரடியாக ஒரு பணியில் உட்கார வைத்து வேலை வாங்க முடியாது. ட்ரெயினிங் தரவேண்டும். ஒரு இரண்டு மாதங்களாவது ஆகும்.
வேலை தேடும் இந்த ஒரு ஆண்டில் அண்ட்ராய்ட், ஐபோன், HTML5, வெப் சர்வீசஸ், XML, நெட்வொர்க்கிங் என்று எதையாவது பழகினீ ர்களா என்றேன், அதுவும் இல்லை.
புற்றீசல் போல முளைத்திருக்கும் கணிணி படிப்பை சொல்லித்தரும் டிவி விளம்பர ஸ்காலர்ஷிப் நிறுவனங்களிடம் ரெண்டு சர்ட்டிபிக்கேட்ஸ் வாங்கி வைத்துள்ளார். ஆனால் அது இண்டஸ்ட்ரிக்கு தேவையானதாக / லேட்டஸ்ட் டெக்னாலஜியாக இருக்கவில்லை...
ஆக, ஒரு ப்ரஷ்ஷர் அல்லது இளம்பொறியாளராக இருப்பவருக்கு உருப்படியாக எதுவும் தெரிவதில்லை, அல்லது என்ன தெரியவேண்டும் என்ன படிக்கவேண்டும் என்றும் தெரியவில்லை.
ஏதாவது ஓப்பன் சோர்ஸ் போரம்மில் இணைந்துள்ளாரா / தனியாக ஏதுவும் ப்ராஜக்ட் செய்துள்ளாரா என்று பார்த்தேன் அதுவும் இல்லை.
ஆக, படிப்பு முடிந்து வெளியே வந்தவுடன், மனதில் பயத்தோடு, வேலை வேண்டுமே என்று தேடுவதை செய்கிறார்கள், பேஸ் புக்கில் "நான் எஞ்ஜினீயர் எனக்கு வேலை இல்லை" என்று ஏதாவது ஒரு த்ராபை குழுமத்தில் இணைந்து போட்டோஷாப் வேலைகள் செய்து விளையாடுகிறார்கள்.
ஆனால் இந்த இண்டஸ்ட்ரி என்ன மாதிரியான ஆட்களை தேடுகிறது அதற்கு எப்படி தகுதியாவது என்று ஆழமாக சிந்திப்பதே இல்லை...
"வேலை வேண்டும் என்றால் எக்ஸ்பீரியன்ஸ் தேவை என்று சொல்கிறாயே, நீ வேலை கொடுத்தாத்தாண்டா எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும்" என்பது இளம்பொறியாளர்கள் மத்தியில் எப்போதும் வளைய வரும் ஜோக்.
எக்ஸ்பீரியன்ஸ் இல்லையா ? எக்ஸ்பீரியன்ஸ் ஆட்கள் என்ன செய்யுறாங்க என்று பார்த்து அதை செய்யுங்க. CAD CAM Civil என்று அனைத்து துறைகளுக்கும் பொருந்தக்கூடியது தான் இது. (IT துறைக்கு அதிகம் பொருந்தும்).
ஒரு ஆண்டு 'வேலை தேடிய வேலை' செய்தமைக்கு கூடவே அண்ட்ராய்ட் / HTML5 / SQL Server / Web Development அப்படீன்னு எதையாவது செய்துகொண்டே இருந்தால் அதை வேலைக்கான நேர்முகத்தேர்வில் உங்களை ஷோகேஸ் செய்ய பயன்படுத்தலாமே ?
ஒரு டிசைனர் அவருடைய டிசைன்களை கையோடு கொண்டுபோய் காட்டினால் - அந்த டிசைன் அற்புதமாக இருந்தால் - வேலை தருவாங்களா மாட்டாங்களா ? அந்த டிசைன் தானே அவருடைய எக்ஸ்பீரியன்ஸ் ? பி.டெக், பி.இ, எம்.இ, எம்.சி.ஏ முடித்துவிட்டு உங்கள் துறையில் ப்ராக்டிக்கலாக என்ன செய்யமுடியுமோ (தகவல் தொழில் நுட்ப துறையாக இருந்தால் ஒரு மொபைல் அப்ளிக்கேஷன் செய்யலாம்) அதை செய்யுங்களேன். அதை உங்கள் எக்ஸ்பீரியன்ஸ் ஆக காட்டுங்களேன்...
நீங்கள் இப்படி களத்தில் குதித்து ராப்பகலாக உங்கள் துறையில் உழைக்கும்போது நல்ல வேலையும் உங்களை தேடிவரும், உங்கள் பெற்றோரும், நன்பர்களும் உங்களை மதிப்பார்கள் ! நீண்ட நாட்களாக சொல்லவேண்டும் என்று தோன்றிய விஷயம். மனதின் பாரம். இறக்கி வைத்துவிட்டேன்...
டெயில் பீஸ் : நேர்முகத்தேர்வில் அந்த இளம்பொறியாளரை கனத்த இதயத்தோடு ரிஜெக்ட் செய்துவிட்டேன்...!!!