Monday, February 25, 2013

அமீரின் ஆதி பகவன்

அமீரின் ஆதி பகவன் படத்தை நேன்று பார்க்கும் பாக்கியம் கிட்டியது. பி.வி.ஆர்  குர்கான், டிக்கெட் விலை 835 (பாப்கார்ன், மோமோஸ், கார்ன் 550). திரைப்பட விமர்சனம் எழுதி கனநாளாச்சு, ஏன் வலைப்பதிவு எழுதியே ரொம்ப நாளாச்சு. எப்படி வருதுன்னு தெரியல, இருந்தாலும் எனக்கு இருக்கும் ஆயிரக்கணக்கான (டேய் டேய்) வாசகர்களை நம்பி எழுத உக்காந்துட்டேன் !! நீங்க கண்டுக்காதீங்க.


இந்த விமர்சனத்தை அமீரோ, அவரோட தயாரிப்பாளர் அன்பழகன் எம்.எல்.ஏவோ படிச்சுட்டு, தூக்குடா அந்த செந்தழல் ரவியன்னு என்னை சென்னைக்கு ப்ளைட் டிக்கெட் போட்டு கூட்டிக்கிட்டு போயி ரூம போட்டு குமுற குமுற கும்ம வாய்ப்பு இருக்கு. இல்லைன்னா அமீர் கமிஷனர் அலுவலக வாசல்ல டி.வி பேட்டி கொடுக்கவும் வாய்ப்பு இருக்கு ( டெல்லியை சேர்ந்த மென்பொருள் வல்லுனர் என்னுடைய படத்தை பற்றி தவறான தகவல் பரப்புகிறார், அவரை உடனே கைது செய்யனும் அப்படீன்னு). இருந்தாலும் டம்மி பீஸான என்னை ஏன் கைது எல்லாம் செய்யப்போறாங்க ? (ஒரு வேளை படத்துக்கு விளம்பரமா போவுதுன்னு போனாலும் போவார், டேய் ரவி உனக்கு வாயில வாஸ்து சரியில்ல, உனக்கு நீயே ஆப்பு வெச்சுக்கற பாரு?)



புகை பழக்கத்தை பற்றி கொலைவெறியான ஒரு நீயூஸ் ரீலுக்கு அப்புறம் படம் ஆரம்பிச்சது. யாழினிக்கிட்ட சொல்லியிருந்தேன். சவுண்டு விடக்கூடாது, மெனி பீப்புள் படத்த பாத்துக்கிட்டிருப்பாங்க, டிஸ்டர்ப் ஆகும்னு. மோமோஸும், கார்னும் வாங்கித்தந்தா கம்முனு இருக்கேன்னு சொல்லி ஒத்துக்கிட்டா. படம் ஆரம்பிச்சு பத்து நிமிஷத்துல மோமோஸ் எங்க, கார்ன் எங்கன்னு கேட்டு தொந்தரவு பண்ண ஆரம்பிச்சுட்டா. அதை வெளியே போய் வாங்கி வந்த வகையில 5 நிமிஷம் வேஸ்ட் ( படம் பாத்த மொத்த ரெண்டரை மணி நேரமும் மரண வேஸ்டுங்கறா என் பொண்டாட்டி, அதை நீங்க கண்டுக்கிடாதீங்க)..



ஈஸ் திஸ் தெலுங்கு மூவி ன்னு கேட்டா பொண்ணு. நோ நோ டமில் மூவின்னு சொல்லிக்கிட்டிருக்கும்போதே படத்துல ஆந்திரா, ஹைதராபாத், படபடன்னு தெலுங்கு வசனம்னு பேச ஆரம்பிச்சானுங்க. அடடா, தெலுங்கு படம்னே சொல்லியிருக்கலாமேன்னு நினைச்சேன் !

ஆரம்பத்துல இரண்டு மெகா லஞ்ச ஊழல் அண்ணன் தம்பிகளை சி.பி.ஐ புடிக்க போவுதுன்னு டிவியில நியூஸ் காட்டறாங்க. சி.பி.ஐ அதிகாரிகள் மின்னல் வேகத்துல வந்து (அதுல ஒரு ஆபீஸர் தான் ஜெயம் ரவி) தங்கம், வைரம், பணம்னு அள்ளுறாங்க. பெட்டை கிழிக்கறார், அதுல நோட்டு நோட்டா பணம். (டேய் இன்னுமா பெட்டுக்குள்ள பணம் வெக்கறீங்க, சுவிஸ்ல அக்கவுண்ட் இல்லையா ? )

ஜெயம் ரவி மாடியில இருந்து கீழ பாக்குறார். கீழே நாய் கொலைக்குது. தரையை சுரண்டி சுரண்டி காட்டுது. அங்க நோண்டி பாத்தா கட்டி கட்டியா தங்கம். அந்த நாய்க்கு பிஸ்கெட் எதுவும் போடலியா ? அட்லீஸ்ட் ரெண்டு சிக்கன் பீஸ் ? அந்த ஆந்திரா குடும்பத்துல இருக்கவங்க எல்லாம் ரெண்டு எடுப்பு சாப்பாடு சாப்பிடுற மாதிரி இருக்காங்க, நாய்க்கு கூடவா சோறு வைக்கமாட்டாங்க ? கரெக்டா சிபிஐ அதிகாரிங்க வரும்போது கொலைச்சு தங்கத்த காட்டி கொடுக்குது பாரு டாபரு..

அப்புறம் வாட்டர் டேங்ல தங்கம், ரூம்ல வைரம்னு எல்லாத்தையும் அள்ளி மூட்டையா கட்டி கொண்டு போறார். இங்கிலீஷ் சானல் நியூஸ் அளவுக்கு வர பெரிய கிரிமினெல்ஸ ரொம்ப சப்பையா காமிக்கறாங்க (ரெட்டி சகோதரர்களை மனசுல வெச்சு அவங்க கேரக்டரை பின்னியிருக்கார் ஏதோ ஒரு உதவி இயக்குனர்)..

இந்த நேரத்துல தான் நான் பாப் கார்ன் வாங்க போறேன். வந்து பாத்தா, ஜெயம் ரவி உண்மையிலேயே போலீஸ் இல்லையாம். (சிபிஐயும் இல்லையாம்). தொங்கனா கொடுக்காவாம். கூட வந்த சப் இன்ஸ்பெக்டர்ஸ் கூட வெறும் யூனிபார்மும், ஹைதராபாத் பிரியாணியும் கொடுத்து கூட்டி வரப்பட்ட டம்மி பீசுகளாம். (ரைடின் போது ரெட்டி பிரதர் அண்ணைய்யா ஒரு இன்ஸை பார்த்து கேப்பார். டேய் உன்னை இந்த ஏரியாவுல பார்த்ததே இல்லைன்னு. அவர் சொல்வார், நான் இந்த ஏரியாவுக்கு புதுசா வந்து ஜாயின் பண்ணியிருக்கேன்னு. லாஜிக்கு ? அடப்போங்கய்யா)...

கட் பண்ணா தாய்லாந்து. அங்க அம்மா தங்கச்சியோட பஞ்சம் பொழைக்க போறார் ஜெயம் ரவி. ஏன்யா பஞ்ச பரதேசி எப்படி தாய்லாந்துல / அதுவும் கரெக்டா பட்டாயாவுல பஞ்சம் பொழைக்க போறான் ? பாஸ்போட்டு விசா ஒர்க் பர்மிட் இதுக்கெல்லாம் ரொம்ப செலவாகுமேய்யா ? அன்பழகன் எம்.எல்.ஏ காசு போடுறார் அப்படீங்கறதுக்கா அங்க சாண்ட்விச் மசாஜை எஞ்சாய் பண்ணிட்டீங்க. வாழ்வு தான் போங்க. அங்க பொட்டலம் விக்கறதை பார்த்து அந்த தொழில் செய்ய முடிவெடுக்கிறார் ஜெயம் ரவி. பக்கிகளா, படங்கள்ல குடிக்கறதையோ, புகைபுடிக்கறதையோ செய்யமாட்டேன்னு கடைசி வரை நின்ன எம்.ஜி.யார் எங்க, அன்புமணி ஏதோ கோச்சுக்கிட்டார்னு படங்கள்ல புகைபுடிக்கறதை விட்ட ரசினிகாந்து எங்க ? ஹீரோ பொட்டலம் விக்கிற மாதிரியான கேவலமான ஒரு தொழிலை வலிந்து செய்யுறமாதிரி ஏன் காட்டனும் ? ஹீரோவை ஒர்ஷிப் பண்ணுற தேசம்யா இது. அட ஹீரோ பணம் சம்பாதிங்க ரொம்ப கஷ்டப்பட்டுட்டார், அதன் பிறகு தான் இந்த முடிவு எடுத்தார்னு காட்டினீங்களா ? இல்லையே ? (ஒருவேளை நான் பாப்கார்ன் வாங்க போன சைக்கிள் கேப்ல காட்டினீங்களா ? என் மகள்கிட்ட கேக்கலாம்னா அவளுக்கு நாலு வயசு. டோரோமான்ல சிசூக்கா என்ன செஞ்சான்னு கேட்டாலாவது சொல்வா, இதெல்லாம் எப்படி கேக்க முடியும்)...

ரைட்டு. அப்படியே தாய்லாந்துல கேங்ஸ்டர் ஆகிடுறார் ஜெயம் ரவி. ஒரு கேங்ஸ்டர் அப்படீங்கறீங்க, ஒரு நாலு பேரையாவது கோட்டு போட்டு சுத்தி நிக்க வெக்கலாம்ல ? மொக்கையா தன்னந்தனியா ஜிம்பாடியோட ஒரு ப்ரண்டோட ஒரு கேங்ஸ்டர் இருக்க முடியுமாய்யா ? இதையெல்லாமா நாங்க சொல்ல முடியும ? மும்பையில கேங்ஸ்டர் ஆவுறார்னு காமிச்சிருந்தா அந்த ப்ளைட் டிக்கெட் / தாய் மசாஜ்ஜுக்கு ஆன செலவுல பத்து டாட்டா சுமோவ வாடகை எடுத்து அதகளம் பண்ணியிருக்கலாமே. கோபி கோட்டை போட்டு குறுக்கால நெடுக்கால எதுத்தாப்ல பின்னாலன்னு பதினைஞ்சு ஷாட் எடுத்திருக்கலாமேடா ?



அங்க ஹீரோயினை (நீத்து சந்திரா) சந்திக்கிறார் ஆதி (படத்தில் ஜெயம் ரவி ஒரு கேரக்டர் பெயர்). ஹீரோயின் பார் கேளா வேலை செய்யுறா. டம்ளரை கீழ போட்டு பார் ஓனர் கிட்ட பளார்னு அறை வாங்குறா. அதை கண்டு மனம் பொறுக்காம காப்பாத்துறார் ஹீரோ. ஹீரோயின் நீத்து சந்திரா ரெட்டை நாடி சரீரம். ஒரு காட்சியில குண்டா தெரியுறாங்க, ஒரு காட்சியில ஒல்லியா தெரியுறாங்க (சும்மாவா, படம் நாலஞ்சு வருசமா எடுக்கறாங்களாமே). இதை விட மரண மொக்கையான ஒரு ஹீரோயினை நான் சமீபத்துல பாக்கல. ஆனா அவங்களுக்கு பர்பார்ம் பண்ணக்கூடிய / ஸ்கோப் உள்ள ஒரு ரோல். க்ளைமாக்ஸ் வரைக்கும் அடிக்கடி வராங்க. (இது தமிழ்படத்துல அபூர்வம்). மேற்கொண்டு அவங்களை பத்தி பின்னால / கீழ பாக்கலாம்...விமர்சனத்துல..

படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் ரகுமானும் வருகிறார். ஆனால் பெரிய ஸ்கோப் இல்லாத ரோல். இதில் நடிச்சதுக்கு (???) நடிக்காம இருந்திருக்கலாம். ஜெயம் ரவியின் அம்மா கேரக்டரில் வரும் நடிகையை எங்கயோ பாத்த மாதிரி இருக்கு. ஆனா பெயர் தான் நியாபகம் வரலை. அவங்களுக்கும் எந்த ஸ்கோப்பும் இல்லை...



ஹீரோவை ஏமாத்தி, மும்பைக்கு கூட்டிட்டு வராங்க நீத்து சந்திரா. தன்னந்தனியா ஏர்போர்ட்ல கோட்டை மாட்டிக்கிட்டு, அவரோட சொந்த லக்கேஜை உருட்டிக்கிட்டு (தாய்லாந்துல பெரிய கேங்க்ஸ்டர்) வரார் ஹீரோ ஆதி. வந்தவுடன் இங்கே மும்பையில் கால் டாக்சியில் உட்கார்ந்த ஹீரோவை மயக்க மருந்து கலந்த கூல்ட்ரிங்ஸ் மூலம் மயக்கி (வேற ஐடியா எதுவும் தோணலியா) முடக்குகிறார் நீத்து சந்திரா...மும்பை கேங்ஸ்டராக இருக்கும் ஆதியை போன்ற உருவத்தில் இருக்கும் பகவான் என்பவன் காதலியான நீத்து, ஆதியை காவு கொடுத்து பகவானை காப்பாற்ற இப்படி நடித்தாராம்...

தமிழ் பேசும் பெரிய மூக்கு அசிஸ்டெண்ட் கமிஷனர் அவரை தூக்கி சிறையில் அடைக்கிறார். மராட்டியர்களுக்கே உரிய முகவெட்டு. சீரியஸான நடிப்பு. கொஞ்சம் குள்ளம், சின்ன உருவம். ஆனால் ஷார்ப்பான நடிப்பு. இவரை நிறைய படங்களில் எதிர்பார்க்கிறேன் !

மும்பை பகவான் என்ற கேரக்டரில் ஜெயம் ரவி, பெரிய கேங்ஸ்டர். லிப்ஸ்டிக், நெயில் பாலீஷ் எல்லாம் போட்டுக்கொண்டு... (இவர் ஒரு திருநங்கையா என்றால் அதுவும் இல்லை. நீத்து சந்திரா எதிரில் பார்கேளை தள்ளிக்கொண்டு போவதுபோல காட்டுவது).  என் மகள் யாழினி விழுந்து விழுந்து சிரித்து ரசித்தது இந்த காட்சியைத்தான். காட்சியின் சீரியஸ்நெஸ் தெரியாமல் சீ, ஒன் பாய் ஈஸ் புட்டிங் நெய்ல் பாலீஷ் என்று காமெடி செய்தாள்...அந்த பகவான் கேரக்டருக்கும் நீத்து சந்திராவுக்கும் ஏன் இவ்வளவு காதல் என்று அழுத்தமான காட்சிகளை வைக்காததால் மனதில் ஒட்டவேயில்லை. இவனும் கேங்ஸ்டர், அவனும் கேங்ஸ்டர். நீயும் கெட்டவ. தாய்லாந்துல செட்டில் ஆகவேண்டியது தானே என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை...(பார் கேளா இருந்தவளை வீட்டுக்கு வரியான்னு கூப்பிட்டாராம் பகவான் ஜெயம் ரவி. அது தான் இந்த காதலுக்கு காரணம் என்ற எக்ஸ்ப்ளனேஷனும் வெக்குறான்)..


இன்னொரு சக்கத்த காமெடி, தாய்லாந்தில் குண்டடி பட்டு சிகிச்சையில் இருக்கும் ஆதி (இந்த கட்டு போடும்போது மேல ரெண்டு சொட்டு ரத்தம் வெச்சு கட்டுறதை எந்த டாக்டர் டா சொல்லி கொடுத்தான் ? எல்லா படத்திலும் சொல்லி வெச்ச மாதிரி கட்டு மேல ரத்தம். ஒழுங்கா ட்ரெஸ்ஸிங் கூட பண்ணத்தெரியாதா இந்த சினிமா டாக்டேர்ஸுக்கு) ஜெயம்ரவி, நீத்து சந்திரா வரைந்த படம் ஒன்றை பார்ப்பார். நீ ஸ்கெட்ச் எல்லாம் பண்ணுவியா என்று கேட்பார். அந்த படத்தை ஆடியன்ஸிடம் காமிக்கும்போது, மீசை இல்லாத சூர்யா மாதிரி இருக்கும். ஏன் சூர்யா படத்தை நீத்து சந்திரா வரைந்தார் (அல்லது வரையவே தெரியாத உதவி இயக்குனர்) என்பது புரியாத புதிர்...ஹி ஹி !!!

கடைசியில் ரெட்டி பிரதர்சிடமும் (எங்கடா எங்க காசு என்று கேட்டு உதைக்கிறார்கள்), மும்பை காவல்துறையிடமும் மரண அடி வாங்கி (மினிஸ்டர் தம்பியை பகவான் கொன்றது, ஆனால் பழியை ஆதி மேல் போட்டு என்கவுண்டர் செய்ய ப்ளான்), பகவானிடம் வேலை செய்த ஒரு அடியாளுடன் கோவா தப்புகிறார் ஆதி ஜெயம் ரவி. தாய்லாந்து, அப்புறம் கோவா, நல்லா எஞ்சாய் பண்ணிட்டீங்க உதவி இயக்குனர்ஸ்...ஏன் கம்மியா காசு செலவாகுற ஒரு சிட்டியில எடுக்கறது ? ஏன் பாண்டியிச்சேரியில எடுக்கிறது ? நீங்களே இப்படி செலவை இழுத்து விடுறது அப்புறம் தயாரிப்பாளர் சரியா காசு கொடுக்கலைன்னு வருசக்கணக்கா படத்தை எடுக்கறது ? போங்க சார் !!!

மும்பை பகவான் அடியாளாக வந்து ஆதி ஜெயம் ரவிக்கு உதவி செய்யும் தோழர், ஹேர் ஸ்டைல், உடல் மொழி, உடைந்த தமிழ் வசன உச்சரிப்பு என்று பல இடங்களில் இம்ப்ரஸ் செய்கிறார். இயக்குனர்கள் கவனித்து இந்த தங்கத்தை மண்ணில் இருந்து பிரித்து எடுக்கவேண்டும் :) - பல படங்களில் இவரை பார்க்க விரும்புகிறேன் !!!



கடைசியில் நீத்து சந்திராவோடு ஒரு க்ளைமாக்ஸ் பைட், அதன் பிறகு அவரை கொல்லுதல், பிறகு பகவானோடு பைட், அவரை கத்தியால் குத்துதல் (பகவான் தப்பிச்சுடறானாம், செக்கண்ட் பார்ட் வெக்குறாங்க போலிருக்கு) போன்ற இம்சைகளுக்கு பிறகு படம் முடிகிறது.

இவ்வளவு அழுத்தமான கேங்ஸ்டர் கதையில் கடைசியில் நீத்து சந்திராவின் முக்கியத்துவத்தை அதிகரிப்பதாக முயற்சி செய்து (ஹும், யாரோட இன்புளூயன்ஸ், தயாரிப்பாளரா இயக்குனரா ? ) லேடீசுக்கு பைட் வெச்சு, அவரை ஹீரோ கத்தியால் குத்தி கொல்வதாக காட்டுவது படு மொக்கை. தமிழ் கூறும் நல்லுலகில் (குறைந்தபட்சம் திரைப்படங்களிலாவது) பெண்களை தெய்வமாக மதித்து காட்டுங்கப்பா. அது இல்லை என்றால் பெண்களின் ஆதரவு கிடைக்காது. திருமதி செல்வம் இயக்குனர் கிட்ட டியூஷன் போங்க !!!



மேக்கப் பற்றி - தாய்லாந்து காட்சிகளில் நீத்து சந்திரா பாதி தூக்கத்தில் எழுந்தது போல ஒரு மொக்கை மேக்கப். பகவான் கேரக்டர் புருவத்தை மொக்கையாக்கி ஒரு மேக்கப். இந்த துறை கம்ப்ளீட் பெயிலியர் என்று தான் நான் சொல்வேன் ! (அமவுண்ட் செட்டில் பண்ணலியா)



நீத்து சந்திரா எப்போதும் புகை பிடிப்பது போல காட்டுவது சகிக்கலை. ஏன்யா கெட்டவன் என்றால் புகை பிடித்துக்கொண்டிருப்பது போல காட்டினா போதுமா ? புகை பிடிக்கறவன் எல்லாம் கெட்டவன், மீதி பேர் எல்லாம் நல்லவனா ? ஏற்கனவே ஒரு சூர்யா படத்துல அவர் முக்காவாசி நேரம் புகை புடிச்சுக்கிட்டே இருக்கறது பார்த்து நொந்தவன் நான். அப்பவே உங்களை யாரும் கேக்கலை, அதனால இன்னும் நீங்க மாத்தலை !!



கேமரா மரண மொக்கை. மேலே இருந்து கீழே காட்டுவது ஒன்னுதான் நீங்க கண்டுபிடிச்ச டெக்கினிக்கா ? (SOB Network கார்க்கி / ராஜன் வீடியோ விமர்சனத்தில் கார்க்கி இதை சரியாக பாயிண்ட் செய்தார்...). மும்பையில் ஜட்கா வண்டிகளோடு குதிரைகள் நிற்கும் ஒரு ஷார், மொபைல் காமிராவில் எடுத்தது போல இருக்கே ? (எப்புடி சரியா கண்டுபுடிச்சேனா ? )

இரட்டை ஜெயம் ரவிகளை க்ளைமாக்ஸ் பைட்டில் கொண்டுவரும் காட்சி - படத்தின் உயிர்நாடியான காட்சி - அரதப்பழசான கேமரா டெக்னிக்குகளால் மரண மொக்கையாகிறது. ஒரு ஆள் நடந்துவரும்போது இன்னொரு ஆளை ஷோல்டரை காட்டுவது / காலை காட்டுவது என்பது எல்லாம் ஒரு டெக்னிக்கா ? பழைய எம்ஜியார் படங்களில் வரும் இரட்டையர் காட்சிகளின் போஸ்ட் ப்ரொடக்சன் ஒர்க்கில் 10 சதவீதம் கூட இல்லை. இதில் சுயவிமர்சனம் செய்துகொள்ளவேண்டியது கேமராமேன் மட்டுமல்ல எடிட்டரும்தான். ஒரு காட்சியில் ஒரு லாங் ஷாட் அப்புறம் திடீரென ஒரு க்ளோசப் என எடிட்டரும் மரண மொக்கையாகிறார். பொதுவாக நான் இது போல திரைக்காட்சிகளை நுணுக்கமாக பார்ப்பவன் அல்ல. ஓவராலாக / பொத்தாம்பொதுவாக திரையின் மையத்தை பார்ப்பவன். எனக்கே எடிட்டரின் மொக்கைத்தனம் விசிபிளாக தெரிகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் !!!

ஆரோ திரிடி தொழில்நுட்பத்தை விஸ்வரூபத்துக்கு பிறகு பயன்படுத்தும் படம் என்று சொன்னார்கள். எதிர்பார்ப்போடு போனேன். ஆனால் மகள் அதிக சத்தம் வருகிறது என்று பயந்ததால் அவளது காதுகளை என் கையால் மூடிக்கொண்டு படம் பார்க்கவேண்டிய நிர்ப்பந்தம். ஆரோ திரிடி அட்டு திரிடியானது இங்கே ! விஸ்வரூபம் பார்க்கும்போது எந்த கம்ப்ளைண்ட்டும் செய்யவில்லையே அவள். தவறு எங்கே என்பது வெள்ளிடைமலை !!



இசை - கோவாவில் நடக்கும் ஒரு பாட்டு ரசிக்கும்படியாக இருந்தது. வேறு பாடல்கள் எதுவும் இருந்ததா ? எதுவும் நினைவில் தங்கவில்லை என்பது தான் நிஜம் !! யுவன் சங்கர் ராஜாவா இசை ? வாரிசு நடிகர்கள் போல வாரிசு இசையமைப்பாளர்கள், வாரிசு கவிஞர்கள், வாரிசு எடிட்டர்கள் அடாடா ! போதும்யா. க்ரியேட்டிவ் பிஸினஸிலாவது நல்ல கலைஞர்களை வரவிடுங்கள். வாரிசுகள் தொல்லை தாங்கலை !!!



படம் முடிந்தவுடன் கொலைவெறியோடு முறைக்கும் மனைவியை - நீதான தமிழ் படத்துக்கு கூட்டிட்டு போன்னு சொன்ன என்று சமாளித்து, மேலெங்கும் இறைந்திருந்த பாப்கார்னை தட்டிவிட்டுக்கொண்டு யாழினியை தூக்கிக்கொண்டு எழுந்தால், அமீர் படம் எப்படி எல்லாம் எடுக்கிறார் (ஜாக்கி சான் படத்துல கடைசியில வருமே) என்று காட்டுகிறார்கள். பருத்தி வீரன் எடுத்த அமீரா இது என்று கடைசியில் ஒரு லுக் விட்டுவிட்டு, தப்பித்தால் போதும் என்று கார் பார்க்கிங் நோக்கி ஓடி, வீட்டுக்கு வந்து வரட்டு ரொட்டியை  தின்ற (தோசை கூட ஊத்தி தரமாட்டேன்னுட்டாய்யா) ஒரு அப்பாவியின் விமர்சனம் தான் இது. உங்களுக்கு குமுறனும் என்றால் கமெண்ட் செக்சனில் குமுறுக. ப்ளைட் டிக்கெட் போட்டால் நானே வந்துவிடுகிறேன். இழுத்து வெச்சு குமுறுங்க...அதை விட்டுட்டு போலீசுக்கு எல்லாம் போகாதீங்க !!!



இந்த படத்தை இந்து அமைப்புகள் எதிர்த்தன. எதிர்த்தவங்களுக்கு எல்லாம் போட்டு காட்டியிருந்தால் எவ்ளோ நல்லா இருந்திருக்கும் :))  - இப்ப பட்டது நாங்க மட்டும் தானே ?


படத்தை பார்க்கலாமா வேண்டாமா என்ற கேள்விக்கு நான் பதில் சொல்ல மாட்டேன் ! ஏன்ன படம் வந்து ரொம்ப நாளாச்சு. நீங்களே கேள்விப்பட்டிருப்பீங்க !! கடைசியா ஒரு விஷயத்தோட விமர்சனத்தை முடிச்சுக்கறேன்... !!! (தாய்லாந்து காட்சிகள்ல ஹோட்டல் ரூம்ஸ்லாம் நல்லா இருக்கு. எந்த ஓட்டல் சார் ? குடும்பத்தோட போனா தங்கலாம்)


க்ளைமாக்ஸில் ஆதி ஜெயம் ரவி, பகவான் ஜெயம் ரவியை சந்திக்கும்போது, டேய் பகவான், உன்னால நான் ரொம்ப பட்டுட்டேண்டா என்பார். த்யேட்டரில் ஒரு குரல் - நாங்களும்தாண்டா !! என்று. இது ஒரு சாம்பிள் தான் !!! உங்க கருத்துக்களை ஆர்.டி ஆக / லைக் ஆக / பின்னூட்டமாக எழுதுங்க !!! படங்கள் உதவி இண்டர்நெட். யாருக்காவது ஆட்சேபனை இருந்தால் பதிவில் உள்ள படங்களை (ஏன் பதிவையே) நீக்க தயங்கமாட்டேன் !!