மாபாரதத்தில் வரும் நகுசன் மகன் யயாதி சுக்கிராச்சாரியின்
மகள் தெய்வானையை மணக்கிறான். ஒரு பூசலின் விளைவாக அவளது வேலைக்காரியாக அசுர அரசன் விடபன்மன் மகளிடம் மூன்று மக்களைப் பெற்றான்.
இதையறிந்த சுக்கிரன் அவனை முதுமையடையச் செய்து பின்னர்
மகன்களிலொருவனிடமிருந்து இளமையைப் பெற்றுக்கொள்ளலாம் என்றான்.
தெய்வானையின் மக்கள் மறுக்க ஒப்புக்கொண்ட வேலைக்காரியின் மகன் பூரு
அவனுக்குப் பின் அரசனானான். மனைவியின் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
அவர்களில் யது என்பவனது வழிவந்தவர்கள் யாதவர் எனப்படுவர். பூகு வழி
வந்தவர்கள் துரியோதனன் முதலியோர். யது வழி வந்தவர்களாக கண்ணனும் சேர,
சோழ, பாண்டியர்களும் கூறப்படுகின்றனர்.
கபாடபுரம் கழக தலைநகராக இருந்த போது துவரைக் கோமான் என்ற பெயரில் ஆண்டவன் இவர்களில் ஒருவனாய் இருக்கலாம். துவாரகை எனப்படும் துவரையையும் அதற்கு முன் வட மதுரையையும் ஆண்டவனாகக் கூறப்படும் கிருட்டினன் அதே குலத்தை
சேர்ந்தவனாக இருக்கலாம்.
யூதர்களின் பழைய ஏற்பாட்டின்படி ஆபிரகாம் என்பவனுக்கு குழந்தைகள் இல்லை
மனைவி சாராளின் வேண்டுகோள்படி வேலைக்காரியைக் கூடி ஒரு ஆண் பிள்ளை
பிறக்கிறது. பின்னர் அவனுக்கு 99ம் மனைவிக்கு 90ம் அகவை ஆனபோது
மனைவிக்கும் ஒரு பிள்ளை பிறக்கிறது. மூத்தவன் வெளியேறுகிறான்.
இளையவன் வழி வந்தவர்கள் யூதர்கள் என்றும் மூத்தவன் வழி வந்தவர்கள்
அரேபியர்களென்றும் கூறப்படுகிறது.
மிசிரத்தானம் என்ற சொல்லுக்கு ஐரோப்பியரால் எகிப்து என்று அழைக்கப்படும்
நாடு என்று கதிரைவேற்பிள்ளையின் தமிழ்மொழி அகராதி கூறுகிறது. யயாதியால்
தன் தேசத்தினின்றும் ஓட்டப்பட்ட அவன் புத்திரர் நால்வரும் இந்த மிலேச்ச
தேசத்திற்சென்று அத்தேசத்தாராகி அந்த தேசத்துச் சனங்ககோடு கலந்தமையால்
இது மிசிரத்தானம் என்னும் பெயருடைத்தாயிற்று.
மிசிரம் என்ற சொல்லுக்கு கலப்பு என்பது ஒரு பொருள்
இக்கதைகளிலுள்ள கருக்களின் ஒற்றுமை வியப்பூட்டுகிறது. இரு கதைகளிலும்
வேலைக்காரிக்குப் பிள்ளைகள் பிறப்பது, தந்தையரின் முதுமை ஆகியவை அவை
அத்துடன் யூதர்கள் எகிப்தியர்களின் அடிமைகளாயிருந்து விடுதலை பெற்றவர்
என்ற செய்தியை எரிக் வான் டெனிக்கன் போன்ற ஆய்வாளர்கள் ஏற்கின்ற போதும்
மோசே எகிப்திய இளவரசன் என்றும் அரசுரிமைப் போட்டியில் வெளியேற்றப்பட்ட
அவன் எகிப்திய அடிமைகளைத் திரட்டி வெளியேறி புதிய ஒரு சமயத்தையும் அதைச்
சார்ந்து ஒரு புதிய மக்களினத்தையும் உருவாக்கினான் என்றும்
கருதுகிறார்கள்.
எகிப்திய அரண்மனை நூலகத்திலிருந்து தான் படித்த
வரலாறுகளை இணைத்து யூதர்களின் பழைய ஏற்பாட்டை எழுதினான் என்றும்
கருதுகின்றனர். மிசிரத்தானம் என்ற சொல்லின் பொருள் தெளிவாகவே இக்கதைக்கரு
குமரிக்கண்டத்திலிருந்து அங்கு சென்றதற்கு அசைக்க முடியாத சான்றாகும்.
மூவாரியின் புதிர்கள் என்ற நூல் எழுதிய உருசிய ஆய்வாளர் கோந்திரத்தோவ்,
பண்டை எகிப்திய நாகரிகம் மிகத் தாழ்வான நிலையிலிருந்து திடீரென்று ஒரு
புதிய உயரத்தை எட்டியுள்ளமை, நல்ல உயர்ந்த நாகரிக நிலையை எய்திய ஒரு
புதிய மக்கள் அங்கு குடியேறியுள்ளதற்குச் சான்று என்று கூறுகிறார்.
மிசிரத்தாநம் என்ற சொற்பொருள் அதை ஐயத்திற்கிடமின்றி உறுதிப்படுத்துகிறது.
மனித இன முன்னேற்றத்தில் மிக முகாமையான கட்டம் அவர்கள் நெருப்பைக் கையாளக் கற்றது. கொல் விலங்குகள் தங்களை நெருங்காமலிருக்க நெருப்பை அவர்கள் ஓம்பினர். நெருப்பு தெய்வமானது. நெருப்போம்புவோர் பூசகராயினர்.
தாம் நேசிக்கும், மதிக்கும் அல்லது அஞ்சும் மனிதர்களுக்குத் தாம் மிக விரும்பியுண்ணும் பொருட்களையும் வழக்கமாக உண்ணும் உணவுகளையும் அன்பளிப்பாக அளிப்பது மனித இயல்பு. அதுபோலவே அவற்றைத் தெய்வத்திற்குப் படையலாக்குவதும் வழக்கம். அவ்வாறே அண்டையிலுள்ள குழுக்களோடு நடைபெற்ற சண்டைகளில் செத்தோரையும் பிடிபட்டோரையும் உண்ணும் நரவுண்ணி வாழ்க்கைக் கட்டத்தில் மனிதர்களைக் காவு கொடுத்து நெருப்பிலிட்டு உண்டனர்.
இந்த வரலாற்றுக் கட்டத்தில் தமிழ் மக்கள் இருந்ததற்கு
ஐயத்திற்கிடமில்லாத சான்று உள்ளது. தென் மாவட்டங்களில் வழிபடப்படும்
சுடலை மாடன் கோயில் திருவிழாவில் (தென் மாவட்டங்களில் சிறு தெய்வக்
கோயில் திருவிழாவினை கொடை விழா என்பர்.) நடைபெறும் கணியாட்டில் (கணியான்
கூத்து) பெண் வேடமிட்டு ஆடும் கணியான் வகுப்பு ஆடவர்கள் தங்கள் கையை
அறுத்து வடிக்கும் குருதி கலந்த சோற்றையும் சுடுகாடு சென்று எரியும்
பிணத்தையும் தெய்வங்கொண்டாடுவோன் உண்ணும் நிகழ்ச்சி இன்றும்
நடைபெறுகிறது. *
குழந்தைகளை வருணனுக்குக் காவு கொடுப்பதாக நேர்ந்த செய்தி
மறைகளில் உள்ளது. அரிச்சந்திரன் என்பவன் தனக்குப் பிள்ளை பிறந்தால் அவனை
வேள்வியில் பலியிடுவதாக வேண்ட வருணன் அளித்த வரத்தால் பிறந்த பிள்ளை
அச்சத்தால் நாட்டைவிட்டோட அரிச்சந்திரனுக்கு வருணன் நோயை
உண்டாக்குகிறான். அறிந்த மகன் தன்னைக் காவு கொடுக்க புறப்பட்டுவரும்போது
இந்திரன் 6 ஆண்டுகள் அவனை தன் பாதுகாப்பில் வைத்துக்கொள்கிறான். பின்னர்
சுனச்சேபன் என்பவனது தந்தைக்கு மாடுகளை விலையாகக் கொடுத்து அவனை வாங்கித்
தந்தை அரிச்சந்திரன் மூலம் அவனைக் காவு கொடுத்து வருணனிடமிருந்து
இருவரும் விடுதலை பெறுகின்றனர்.
தென்னிந்தியக் கடற்கரையில் இருந்து சென்று அசிரியாவில் குடியேறியவர்களாக
கூறப்படும் பினீசியர்கள் முதல் ஆண் மகவைக் காவு கொடுத்த செய்தியும்
உள்ளது. யூதர்களின் பழைய ஏற்பாட்டில் ஆபிரகாம் எனப்படுபவன் காவு
கொடுப்பதாகக் கடவுளுக்கு நேர்ந்து பெற்றப் பிள்ளையை காவு கொடுக்கச்
செல்லும்போது மகவுக்குப் பகரம் ஆட்டைக் காவு கேட்டு மகனை விடுவித்த கதை
உள்ளது. இக்கதை குரானிலும் இடம்பெற்றுள்ளது.
பிறந்தால் காவு கொடுப்பதாக வேண்டி ஆண்மகவைப் பெற்றுக்கொள்வது
விந்தையாகத் தோன்றுகிறது. ஒரு பெண்தலைமைக் குமுகத்தில் ஆண்களின்
எண்ணிக்கை தேவைக்கு மிஞ்சியது என்ற அடிப்படையில் இது இருக்கலாம் அல்லது
பெண்தலைமை நீங்கி ஆண்தலைமைக் குமுகமாக
மலரும் சூழலில் மிகவும் வேண்டப்படும் ஆண் மகவைக் காவு கொடுப்பது
கடவுளுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் என்ற எண்ணத்தில் இருக்கலாம்.
மேலேயுள்ள இரு கதைகளிலும் உள்ள இந்த பொதுக்கூறு தவிர இந்தியக்
கதையில் தன் மகனை மீட்க மாட்டைக் கொடுக்கிறான் அரிச்சந்திரன்.
சுனச்சேபனின் தந்தையோ மாட்டைப் பெற தன் மகனைக் கொடுக்கிறான். இரண்டு
நேர்வுகளிலும் மாட்டுக்காக மகன் மாற்றப்படுகிறான். ஒரு வகையில் காவு
கொடுப்பவன் வாக்குறுதியை நிறைவேற்றினாலும் இன்னொரு வகையில் தன் மகனை
காப்பாற்றியதன் மூலம் வாக்குத் தவறுகிறான் அரிச்சந்திரன். பழைய ஏற்பாடு
கதையில் சொன்ன சொல்லைக் காப்பாற்ற முன் வந்தமைக்காக தந்தையையும்,
மகனையும் கடவுள் பாராட்டுகிறார்.
இதே அரிச்சந்திரன் இராமாயணத்தில் இராமனின் முன்னோனாகக் காட்டப்பட்டு வாய்மைக்குத் தனக்கு வழிகாட்டியாக இருந்தவனாக மோகன்தாசு கரம் சந்து காந்தியால் பாராட்டப்பட்டவன். இந்தக் கதையிலும் ஆண் மகவு பாம்பால் சாகும் நிகழ்வு மூலம் குழந்தைச் சாவு எனும்
கதைக்கரு வருகிறது. மொத்தத்தில் மனிதக் காவு விலங்குக் காவாக மாறிய மனித
குல வரலாற்றுச் செய்தி வேத, யூத மரபுகளில் பதிவாகியுள்ளது. தமிழ் மண்ணில்
கோவில் சடங்காக குருதியும் சதையுமாக இன்றும் நிலவுகிறது. இது தமிழகத்தின்
தென்கோடியில் மட்டும் நிலவுகிறது என்ற உண்மை இது குமரிக்கண்டத்தில்
நிகழ்ந்தது என்பதற்கு ஆணித்தரமான சான்று. அத்துடன் பெண்வேடமிட்ட ஆடவர்
இதை நிகழ்த்துவது பெண் பூசாரியர் தலைமையில் இந்தக் காவுகள் நடைபெற்றன
என்பதைச் சுட்டி நிற்கிறது.****
உணவுப் பண்டங்களாக இருந்த காளையும் ஆவும் முறையே உழைப்புக்
கருவியாகவும், பால் முதலியவற்றின் விளைப்பு வகைதுறையாகவும் மாறிய பின்
மாடுகளைக் காவு கொடுத்து நெருப்பிலிடும் வேள்விகளுக்கு ஒட்டுமொத்த
குமுகத்திலும் எதிர்ப்பு கிளம்பியது. இதிலும் பெண்களே
தலைமைதாங்கியுள்ளனர். தாடகை போன்ற பெண்கள் (அரக்கிகள்) வேள்விகளை
அழித்தனர் என்று பொதுவாகத் தொன்மங்கள் கூறினாலும் தக்கன் வேள்வியை அழித்த
காளியை மட்டும் தெய்வமாகக் கொண்டுள்ள உண்மை, மக்கள் இந்த வேள்வி
அழிப்புகளை வரவேற்றனர் என்பதற்கு தொன்ம பூசாரியரையும் மீறிப் படிந்து
விட்ட வரலாற்று எச்சமாகும்.
இங்கு பூசாரியருக்கும் அரசர்களுக்குமான போட்டி தொடங்குகிறது.
மாட்டு வேள்விகள் தகர்க்கப்பட்டதும் பின்னர் போர்க்கருவியான
தேர்க்குதிரைகளை (இரட்டையர்களான அசுவினி தேவர்களை)க் கொண்டு அவை
மீண்டதையும் உபநிடதங்களிலிருந்து மேற்கோள்களால் விளக்குகிறார்
தேவிப்பிரசாத் சட்டோபாத்தியாயா தன் Lokayatha(லோகாயதா) நூலில். அது போல்
அழிந்துபட்ட வேள்வியை மீட்க அரசனும் பூசாரியும் முயன்றதில் அரசன் தோற்று
பூசாரியிடம் அடிபணிந்ததற்கு அவர் சான்று காட்டியுள்ளார்.
காமதேனு போன்ற கேட்டது அனைத்தையும் அளவின்றி வழங்கும் ஆவுக்காக
முனிவர்களுடன் அரசர்கள் போரிட்டு அழிந்த பல கதைகள் தொன்மங்களில் உள்ளன.
இவற்றுடன் பரசுராமன் 21 தலைமுறைகள் அரசர்களை அழித்ததைத் தொடர்ந்து
நாரிகவசன் என்பவன் பெண்களை அரணாகக் கொண்டு அரசாட்சியை மீட்டான். எனவே
அவனுக்கு மூலகன் என்ற பெயரும் உண்டு என்கிறது அபிதான சிந்தாமணி.
[7] இது பூசாரியர் - அரசர் போட்டியில் பூசாரியின் கட்டுக்கடங்கிய
அரசர்கள் என்ற இறுதி அமைப்பு உருவானதற்கான ஒரு தடயம். பரசுராமனே இன்றைய
சேரநாட்டை உருவாக்கினான் என்கிறது தொன்மக் கேரளத்தை கோடாரியை கடலில் வீசி
உருவாக்கினான் என்பதற்கு இரும்புக் கோடாரியை கண்டுபிடித்து அடர்ந்த
காட்டை அழித்தான் என்று பொருள் கொள்வது பொருந்தும். இரணியனைக் கொன்று
அவன் மகன் பிரகலாதனுக்கு பட்டஞ்சூட்டியது, அவனது பெயரனான மாவலியை
நிலத்தில் அழுத்தியது என்று மூன்று தலைமுறைகளுக்கு சேரநாட்டில்
பார்ப்பனர்களுக்கும் அரசர்களுக்கும் இடையிலான போட்டியில் பார்ப்பனர்கள்
வென்றது தொன்மத்தில் பதிவாகியுள்ளது. நாமறிந்த தமிழரசர் அனைவரும்
பூசாரியரின் இந்தக் கட்டுக்கு அடங்கியவர்களே என்பதற்குக் கழக
இலக்கியத்தில் எத்தனையோ சான்றுகள் உள்ளன.
உலக முழுவதும் அரசுக்கும் சமயத்துக்குமான இந்தப் போட்டி நடந்திருக்கிறது,
இன்றும் தொடர்கிறது. அதே வேளையில் பொதுமக்களை ஒடுக்குவதில் பொதுவில் அவை
இணைந்தே செயல்படுகின்றன. விதிவிலக்கான நேர்வுகளில் அவற்றுக்கிடையில்
நிகழ்ந்த பூசல்களில் மக்கள் பயனடைந்துள்ளனர். மார்ட்டின் லூதருக்கும்
வாட்டிக்கனுக்கும் நடந்த மோதலில் ஐரோப்பியச் சிற்றரசர் சிலர் லூதர்
பக்கம் நின்றனர். இங்கிலாந்தின் 4-ஆம் என்ரிக்கும் போப்புக்கும் உருவான
மோதலில் இங்கிலாந்தின் சமயத் தலைமையை அவனே மேற்கொண்டான். அவனுடன்
சேர்ந்து கோயில் சொத்துக்களைப் பங்கு போட்டுக்கொண்ட அவனது நண்பர்களே
அங்கு முதலாளியக் குமுகம் உருவாகக் காரணமாயினர். அதிலிருந்தே பாராளுமன்ற
மக்களாட்சி, மதச்சார்பற்ற அரசு போன்ற கருத்துக்கள் ஐரோப்பாவில்
உருவாகியன. நம் நாட்டிலும் அதனுடைய வீச்சு இருப்பதாக நம்புகிறோம். ஆனால்
நிலக்கிழமைப் பொருளியல் அடித்தளத்தின் மீது பரவிய வல்லரசிய சுரண்டலில்
வளங்களனைத்தையும் இழந்து நிற்கும் நம் நாட்டில் ஆயுத பூசை என்ற பெயரில்
அரசு அலுவலகங்களில் நடக்கும் கூத்துகள் நாம் சமயச் சார்பான
ஆட்சியிலிருந்து விடுபடவில்லை என்பதை விளக்குகின்றன.
இவ்வாறு அரசும் சமயமும் சேர்ந்து மக்களை ஒடுக்குவற்குத் தோதாக
மக்களுக்குப் புரியாத ஒரு மொழி தேவைப்பட்டது. அது ஒருவேளை ஐந்திர
இலக்கணப்படி அமைந்த ஒரு மொழியாக இருக்கலாம். அல்லது பூசகர்கள்
தங்களுக்குள் உருவாக்கிக் கொண்ட மறைமொழி போன்ற ஒரு குழுஉக்குறி மொழியை
முறைப்படுத்துவதற்கான முயற்சியாக இருக்கலாம். அரசன் என்ற பதவியின்
வளர்ச்சி பெற்ற ஒரு கட்டமாக இந்திரனைக் கொண்டால், இந்திரனால் அல்லது
இந்திரனின் முன்முயற்சியால் உருவானது என்று கூறலாம். அதிலேயே இன்றைய
தமிழ் இலக்கணம் உருவாகியிருக்கலாம். *****
ஐரோப்பாவில் உருவான இற்றைப் பல்துறை வளர்ச்சியில் புதிதாக உருவான கலைச்
சொற்களையும் புதிய பொருளில் கலைச்சொற்களாகக் கையாளப்பட்ட பழைய
சொற்களையும் கொண்ட துறை அகரமுதலிகளும் கலைக் களஞ்சியங்களும் உருவாயின.
அதே வேளையில் புதிய சூழலில் உருவான இலக்கியப் படைப்புகள் அறிவியல்
செய்திகளைக் கூறியதோடு அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு முன்னோடிகளாகவும்
இருந்தன. எனவே பொது அகரமுதலிகளும் அனைத்து கலைச் சொற்களுடன் உருவாக
வேண்டி வந்தது.
[10] அதே நேரத்தல் கணினி போன்று எண்ணற்ற புதுத் துறைகளின் தோற்றம்
வளர்ச்சி ஆகியவற்றால் அவற்றுக்குரிய சிறப்பு அகரமுதலிகள் உருவாவதும் அவை
மீண்டும் பொது அகரமுதலிகளை வளப்படுத்துவதும் ஒன்று மாற்றி ஒன்று
நிகழ்ந்து கொண்டிருக்கும் வளர்ச்சி நிலைகள்.
இதே வளர்ச்சி நிலைகள் நாம் இங்கு அலசும் காலகட்டத்தில் இடம் பெற்றிருக்க
வேண்டும். குறிப்பிட்ட வளர்ச்சி நிலைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமையால்
தான் பூசாரியர் அரசன் என்ற ஒரு பதவியை உருவாக்க வேண்டி வந்தது. அவ்வாறு
அரச பதவி உருவான பின் புதிய வளர்ச்சி நிலைகள் வேகம் கொண்டிருக்கும்.
புதிய புதிய துறைகள் தோன்றி வளர்ந்திருக்கும். அப்போது உருவான
துறைநூற்களில் உள்ள சொற்கள் பொதுமக்களுக்குப் புரியாமல் இருந்ததால்
அவற்றை மறை நூல்கள் என்றனர். தொல்காப்பியரும் இசை நூலை நரம்பின் மறை[11]
என்றார்
அடிக்குறிப்பு
[1]அபிதான சிந்தாமணி யது, யாதவர் என்ற சொற்களைக் காண்க
[2முதற்கழகமிருந்த தென்மதுரையை கடல்கொள்ள கபாடபுரம் எனப்படும் துவரையை
(துவார் = கதவு; துவார் → துவாரகை → துவரை. கபாடம் = கதவு) அடைந்தனர்
குமரிக்கண்ட மக்கள். அங்கு இரண்டாம் கழகத்தை நிறுவினர். அங்கு அரசனாய்
இருந்த ஒருவன் பெயர் துவரைக் கோமான். மகாபாரதக் கண்ணன் வட மதுரையைத்
தலைநகராகக் கொண்டு ஆண்டபோது சராசந்தன் என்பவனுக்கு அஞ்சி குசராத்
பகுதியில் இருந்த துவரைக்கு ஓடி தலைநகர் அமைத்து ஆண்டான். மகாபாரதக் கதை,
குமரிக் கண்டத்தில் நடந்த பெரும் போரை, பின்னர் அங்கிருந்த மக்கள்
குடியேறிய வட இந்தியாவில் நடந்த ஒரு போருடன் இணைத்து எழுதப்பட்டுள்ளது.
குமரிக் கண்டத்து நகரங்கள், மலைகள், ஆறுகளின் பெயரைத் தாம் குடியேறிய
இடங்களிலும் இட்டுள்ளனர்
[3]சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் வாழ்ந்த ஆற்றல் மிக்க
பலதுறை அறிஞர்கள் அடிப்படை நூல்கள் பலவற்றைத் தொகுத்துள்ளார். அவற்றுள்
கதிரைவேற்பிள்ளையின் தமிழ் மொழி அகராதியும், சிங்காரவேலு முதலியரின்
அபிதான சிந்தாமணியும் சிறப்பானவை. அவற்றுள் காணக்கிடக்கும் அரிய
செய்திகளுக்குச் சான்றுகளும் தரப்பட்டிருந்தால் மிகப் பயனளித்திருக்கும்.
நம் முன் தலைமுறையினர் செய்த பணிகளை மேம்படுத்துவதும் பின் தலைமுறையினர்
கடமையாகும். செய்வீராக.
[4]வேலைக்காரியின் மகன் வழி வந்தவர்கள் பாண்டவர்களும் கவுரவர்கள் என்பதை
மறைப்பதற்காக, சுக்கிரனின் மகள் மனைவி என்றும் அசுர அரசனின் மகள்
வேலைக்காரி என்றும் கதையைத் திரித்திருக்கக்கூடும். அசுர ஆசிரியன்
சுக்கிரன், தேவர்கள் ஆசிரியன் வியாழன் ஆகியவை இரு கோள்கள். இருவகை
மக்களினங்கள் பின்பற்றிய வானியல் முறைகளை இவை குறிக்கின்றன எனலாம்.
அபிதான சிந்தாமணி சுக்கிரன் A 14 பார்க்க
[5]மாந்தவியலில் இது தாய்வழித் தலைமகனுரிமை (Male primeogeniture in the
matriliueal society) எனப்படும்
[6]இங்கு அரசனின் கட்டுப்பாட்டில் இல்லாத நிலப்பரப்புகளில் வரி போன்ற
வருமானங்களை ஆவாக உருவகப்படுத்தியுள்ளனர் என்று விளக்கம் காணலாம்
[7]நாரிகவசன், மூலகன் என்ற சொற்களைப் பார்க்க. இவனது வழி வந்தவன்தான்
இராமன்
[8]பிரகல் + ஆதன், ஆதன் என்பது சேர அரசர்களின் பெயரிலுள்ள
பின்னொட்டுகளில் ஒன்று. பிரகத் என்பதற்கு முதல் என்று பொருள்
[9]திருமாலின் பதின் தோற்றரவுக் கதைகளில் பரசுராமன், நரசிம்மம், வாமனம்
ஆகிய மூன்றும் சேரநாட்டுடனும் மீன் பாண்டிய நாட்டுடனும் பன்றி
சாளுக்கியர்களுடனும் (புலிக்கேசியின் கொடி பன்றி) கண்ணனும் பலதேவனும்
குமரிக்கண்டத்துடனும் தொடர்புடையவையாக இருப்பது தொன்மங்களுக்கும்
அவற்றைப் பதிந்து வைத்திருக்கும் சமற்கிருதத்திற்கும் தமிழர்களுக்கும்
அவர்களது பிறந்தகமான குமரிகண்டத்திற்கும் உள்ள உறவைக் காட்டவில்லையா?
[10]Chambers Twentieth Century Dictionary / New Edition 1972,
Publishers preface காண்க.
[11]தொல். எழுத்து 33.
ஆக்கம்: இரவா - vasudevan.dr@gmail.com
1 comment:
ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல பாஷைகளில் இறைவன் இருக்கும் இடம் ஹிமெல் (Himmel) என்று சொல்வார்கள், குறிப்பாக ஜேர்மனியில்.
நாம் எமது இறைவன் இருக்கும் இடத்தை ஹிமாலய என்கிறோம்.
இதிலும் மிகவும் நெருங்கிய தொடர்பு இருப்பது போல தெரிகிறது இல்லையா....?
Post a Comment